டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பு: பாதித்த ஒருவர் 2 பேருக்கு பரப்புகிறார்..!!
டெல்லியில் கொரோனா பரவல் விகிதம் அதிகரித்து வருகிறது. இதன்படி பாதித்த ஒருவர் 2 பேருக்கு பரப்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் மறுபடியும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இந்த வாரத்தில் ‘ஆர் வேல்யூ’ என்று அழைக்கப்படுகிற கொரோனா பரவல் விகிதம் 2.1 ஆக அதிகரித்துள்ளது.
அதாவது கொரோனா பாதிப்புக்குள்ளான ஒரு நபர், 2.1 பேருக்கு இந்த தொற்றை பரப்பி உள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யின் கணிதவியல் துறை மற்றும் கம்ப்யூட்டேஷனல் கணிதம் மற்றும் தரவு அறிவியலுக்கான சீர்மிகு மையத்தை சேர்ந்த பேராசிரியர் நீலேஷ் உபாத்யி, பேராசிரியர் எஸ்.சுந்தர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கணக்கீட்டு மாதிரி முறையில் செய்த பகுப்பாய்வில் இது தெரியவந்துள்ளது. தற்போது இந்த பரவல் விகிதம் 1.3 ஆக உள்ளதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இது 4-வது அலையின் தொடக்கமா என்பதை இப்போதே கூறி விட முடியாது எனவும், ஆய்வு நடத்திய பேராசிரியர்கள் கூறி உள்ளனர். அதே நேரத்தில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில், கொரோனா பரவல் போக்கை கண்டறிய முடியாத அளவுக்கு பாதிப்பு விகிதம் மிகக்குறைவாக இருக்கிறதாம். டெல்லியில், ஒமைக்ரான் வைரசின் துணை வைரசான பிஏ.2.12 அதிகளவில் பாதித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.