விஜய் மல்லையா வழக்கு குறித்து போரிஸ் ஜான்சனிடம் பிரதமர் மோடி வலியுறுத்துவார் - வெளியுறவு செயலாளர் தகவல்
பொருளாதார குற்றவாளிகள் வழக்கில் உரிய நீதி வழங்கிட போரிஸ் ஜான்சனிடம் பிரதமர் மோடி வலியுறுத்துவார் என மத்திய வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தாம் பக்ஷி, கடந்த 20 ஆம் தேதி அமெரிக்க எம்.பி. இல்ஹான் ஒமர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பார்வையிட்டதாக குறிப்பிட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த அவர், இந்தியா-பாகிஸ்தான் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதைப் போல செயல்படுவதாக தெரிவித்தார். இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருட்களை உக்ரைன் நாட்டிற்கு எடுத்துச் செல்ல ஜப்பான் அரசு அனுமதி கோரியது என்றும், இதற்கு மும்பையில் தரையிரங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதுவும் வணிக ரீதியிலான விமானம் மட்டுமே தரையிரங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கமளித்தார்.
மேலும் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசும் போது, விஜய் மல்லைய்யா, வைர வியாபாரி நீரவ் மோடி வழக்கில் உரிய நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவார் என்று அரிந்தாம் பக்ஷி தெரிவித்துள்ளார்.