ரூ.50 கோடிக்கு மேல் உள்ள டெண்டர்களை சரிபார்க்க உயர்மட்ட கமிஷன்: கர்நாடக முதல் மந்திரி அறிவிப்பு
டெண்டர் தொடர்பாக ஒப்பந்ததாரர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கர்நாடக முதல் மந்திரி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பெங்களூரு,
கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் கே.பாட்டீல். இவர், கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியான ஈஸ்வரப்பா வளர்ச்சி பணிகளை செய்த ஒப்பந்த தொகையில் 40 சதவீதம் கமிஷன கேட்பதாக குற்றம் சாட்டிய நிலையில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கு தொடர்பாக ஈஸ்வரப்பா தனது மந்திரி பதவியை ராஜினமா செய்தார். இந்த நிலையில், கர்நாடகா முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, 50 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள டெண்டர்களை சரிபார்க்க உயர்மட்ட கமிஷனை அறிவித்தார். இதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமை தாங்குவார் என்றும், மேலும், இதில் நிதி மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றிருப்பர் என்றும் அவர் கூறினார்.
இந்த குழு அடுத்த வாரத்தில் செயல்படத் தொடங்கும் என்று கூறிய முதல் மந்திரி, குழு ஆய்வு செய்த பிறகே டெண்டர்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.