ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் குஜராத்தில் ரெயில் என்ஜின் தொழிற்சாலை - பிரதமர் மோடி அறிவிப்பு
குஜராத்தில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் மின்சார ரெயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
தகோட்,
பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக, அங்கு பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் தகோட் மாவட்டத்துக்கு நேற்று சென்றார்.
அப்போது தகோட் நகரின் புறநகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பழங்குடியினர் மத்தியில் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘விடுதலைக்கு பின் இங்கு நீராவி ரெயில் என்ஜின் பணிமனை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இங்கு ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் மின்சார ரெயில் என்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலையை ரெயில்வே அமைக்க உள்ளது’ என தெரிவித்தார்.
இதன் மூலம் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மிகப்பெரும் மையமாக இந்த பகுதி மாறும் என பெருமிதத்துடன் கூறிய பிரதமர் மோடி, நாட்டின் மின்சார ரெயில் என்ஜின் தேவையை பூர்த்தி செய்வதில் இந்த தகோட் நகரம் முக்கிய பங்காற்றும் என்றும் கூறினார்.
வெளிநாடுகளில் கூட இந்த என்ஜின்களுக்கான தேவை அதிகரித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மின்சார ரெயில் என்ஜின் தொழிற்சாலை அமைவதன் மூலம் தகோட் மாவட்டம் மேலும் வளர்ச்சி பெறும் நிலை உருவாகி உள்ளது.