டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்? - இன்று ஆலோசனை
டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 7.72 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் 501 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. பாதிப்பு விகிதம் 7.72 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரியில்தான் இந்த அளவுக்கு பாதிப்பு விகிதம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஜனவரி 29-ல் பாதிப்பு விகிதம் 7.4 சதவீதமாகவும், ஜனவரி 28-ல் பாதிப்பு விகிதம் 8.6 சதவீதமாகவும் இருந்தது.
நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு விகிதம் 0,31 சதவீதம் மட்டும்தான். அதற்கு மாறாக டெல்லியில் பாதிப்பு விகிதம் அதிகரித்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியது, பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்கியது, பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கி விட்டது, சமூக நிகழ்வுகள் அதிகரித்தது போன்றவை கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க காரணங்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இது 4-வது அலையின் அறிகுறியா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.
இந்த நிலையில், அதிகரித்து வரும் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வருவது குறித்து டெல்லி அரசு இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளது.
இந்த ஆலோசனையில் டெல்லியில் மீண்டும் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது