அலங்கோலமான நிலையில் குஜராத் அரசு பள்ளிகள்: பிரதமர் மோடிக்கு டெல்லி துணை முதல்-மந்திரி தகவல்
அலங்கோலமான நிலையில் குஜராத் அரசு பள்ளிகள் இருப்பதாக பிரதமர் மோடிக்கு டெல்லி துணை முதல்-மந்திரி தகவல் தெரிவித்தார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி, 3 நாட்கள் பயணமாக குஜராத் செல்வதாக அறிவித்தார். அப் போது, வித்யா சமிக்ஷா கேந்திரா என்ற நவீன கல்வி மையங்களுக்கு செல்லப்போவதாக கூறியிருந்தார்.
அவருக்கு பதில் அளிக்கும்வகையில், டெல்லி துணை முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த வாரம், குஜராத் மாநிலம் சென்றேன். அம்மாநில கல்வி மந்திரி ஜித்து வகானியின் சொந்த தொகுதியான பாவ்நகரில் 2 அரசு பள்ளிகளை பார்வையிட்டேன். அங்கு மேஜைகள் இல்லாமல், மாணவர்கள் தரையில் அமர்ந்துள்ளனர்.
கழிவறைகள் இடிந்து கிடக்கின்றன. வகுப்பறையில் ஒட்டடை படிந்து கிடக்கிறது. குப்பைக்கிடங்கு போல் அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன. தற்காலிக ஆசிரியர்கள்தான் பள்ளிகளை நிர்வகித்து வருகிறார்கள்.
குஜராத்தில் 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் பள்ளிகளை மேம்படுத்த பா.ஜனதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.