பாரம்பரிய மருத்துவம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
நம் முன்னோர்கள் எந்த நோய்க்கும் பாதி சிகிச்சை சமச்சீரான உணவில் இருப்பதாக நம்பினர்.
புதுடெல்லி,
மூன்று நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தைத் திறந்து வைத்த பின் பிரதமர் மோடி பேசியதாவது:-
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அவர்களுக்கு இந்தியர்கள் அனைவரின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசி நம் அனைவரின் இதயங்களையும் தொட்டார்.
டெட்ரோஸை எனக்கு நீண்ட காலமாக தெரியும். நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், தனது இந்திய ஆசிரியர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டதை பெருமையுடன் குறிப்பிடுவார்.
இந்தியா மீதான அவரது அன்பு தான் தற்போது ஒரு கல்வி நிறுவனம் தொடங்க செய்திருக்கிறது. அவரது எதிர்பார்ப்பு, நம்பிக்கைகளுக்கு நாங்கள் துணை நிற்போம் என்று அவருக்கு உறுதி அளிக்கிறேன். மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மருத்துவ மையத்தின் மூலம், மனிதகுலம் அனைவருக்கும் சேவை செய்வதற்கான ஒரு பெரிய பொறுப்பை இந்தியா எடுத்துக்கொள்கிறது. பாரம்பரிய மருந்துகள் மூலம் சிறந்த மருத்துவ தீர்வுகளை உலகிற்கு வழங்க இந்த மையம் உதவும். இது ஒரு நிறுவனத்தின் துவக்க விழா மட்டுமல்ல. அடுத்த 25 ஆண்டுகளுக்கு உலகின் பாரம்பரிய மருத்துவ சகாப்தத்தின் தொடக்கம்.
நீரிழிவு, உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு போன்ற நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு, இந்தியாவின் பாரம்பரிய மருத்துவம் உலகிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. மன அழுத்தத்தைக் குறைக்கவும், சமநிலையை பராமரிக்கவும் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு யோகா பெரிதும் உதவுகிறது. யோகாவின் நோக்கத்தை விரிவுபடுத்த, இந்த புதிய மையம் முக்கிய பங்கு வகிக்கும்.
நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் எந்தெந்த பருவத்தில் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்பது பற்றிய தகவல்கள் நிறைந்துள்ளன. நம் முன்னோர்கள் எந்த நோய்க்கும் பாதி சிகிச்சை சமச்சீரான உணவில் இருப்பதாக நம்பினர்.
பாரம்பரிய மருத்துவம் பற்றிய அறிவு முக்கியமானது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் தலைமுறைக்கு இது உதவிக்கரமாக இருக்கும். இந்த மையம் ஆண்டுதோறும் பாரம்பரிய மருத்துவ திருவிழாவை நடத்தலாம், இதில் உலகம் முழுவதிலும் இருந்து அதிகபட்ச நிபுணர்கள் பங்கேற்பார்கள். குறிப்பிட்ட நோய்களுக்கு, முழுமையான சிகிச்சை முறைகள் இங்கு அளிக்கப்படும். இதில் நோயாளிகள், நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் முழு பலனையும் இங்கு பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.