அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2011 -15-ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த போது , வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான டிஜிட்டல் உள்ளிட்ட ஆதார ஆவணங்களை வழங்க தமிழக போலீசாருக்கு உத்தரவிடக் கோரி அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிகை நகல்களை வழங்க உத்தரவிட்ட போதும், குறியீடு செய்யப்படாத ஆவணங்களை வழங்க முடியாது என நிராகரித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டு கடந்த மார்ச் 30ஆம் தேதி கூறிய தீர்ப்பில்,
சான்றளிக்கப்பட்ட குறியீடு செய்யபடாத ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்து. மேலும் அந்த ஆவணங்களை ஆய்வு செய்து பின் நகல் வழங்க கோரி அமலாக்க பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக கரூரைச் சேர்ந்த எம் கார்த்திகேயன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் சுந்தரம் ஆஜரானார். மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத் துறை, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.