உ.பி: போலீசாருக்கு விடுமுறை கிடையாது, விடுப்பில் உள்ளவர்கள் உடனடியாக பணிக்கு வர உத்தரவு - காரணம் என்ன?
உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம்வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது எனவும் ஏற்கனவே விடுமுறையில் உள்ள போலீசார் உடனடியாக பணிக்கு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
லக்னோ,
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மத ரீதியிலான மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மோதல் சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதற்கிடையில், ரமலான், அக்ஷயதிருதியை போன்ற பண்டிகைகள் (மே 3) ஒரேநாளில் வர உள்ளது. இதனை தொடர்ந்து அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. போலீசார், நிர்வாக அதிகாரிகளுக்கு 4-ம் தேதி வரை விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும், விடுமுறையில் உள்ள போலீசார் அடுத்த 24 மணி நேரத்தில் பணிக்கு வர வேண்டும் எனவும் உத்தரபிரதேச முதல்-மந்திரி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அடுத்தடுத்து வரும் பண்டிகைகளையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 4-ம் தேதி வரை போலீசாருக்கு விடுமுறை வழங்கப்படாது எனவும் ஏற்கனவே விடுமுறையில் உள்ளவர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு உடனடியாக பணியில் இணையும் படி அறிவுத்தப்பட்டுள்ளதாகவும் உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.