கார் விபத்தில் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல்!
கார் விபத்தில் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் விஷ்வா உள்பட 4 வீரர்கள் நேற்று கார் மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
அசாம் தலைநகர் கவுகாத்தில் இருந்து மேகாலயாவின் ஷிலாங்க் நோக்கி கார் சென்றுகொண்டிருந்தது. மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிரே வந்த லாரி வீரர்கள் பயணித்த கார் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இளம் வீரர் தீனதயாளன் விஷ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கார் விபத்தில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன் விஷ்வா உயிரிழந்ததற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், கூறும்போது "டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. சக வீரர்களால் போற்றப்பட்ட இவர், பல போட்டிகளில் பங்கேற்று தனித்து விளங்கினார். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.