அரசியல் கொலைகள் எதிரொலி: பாலக்காட்டில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம்
தொடர்ந்து கொலை குற்றங்கள் அரங்கேறி வருவதால், பாலக்காடு மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்து உள்ளது.
பாலக்காடு,
பாலக்காடு அருகே கொழிஞ்சாம்பாறையில் பள்ளிவாசலுக்கு சென்று திரும்பிய எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த சுபைர் என்பவரை கடந்த ஏப்ரல் 15-ந் தேதி மதியம் 2 மணியளவில் அவரது தந்தை கண்முன்னே மர்ம ஆசாமிகள் வெட்டி படுகொலை செய்தனர்.
மேலும் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் பாலக்காடு நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சீனிவாசனை, அவர் வேலை செய்து வந்த கடைக்குள் புகுந்து மர்ம ஆசாமிகள் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
இதுபோன்று தொடர்ந்து கொலை குற்றங்கள் அரங்கேறி வருவதால், பாலக்காடு மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்து உள்ளது. பாலக்காடு மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி 1000-க்கும் மேற்பட்ட போலீசார், தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை ஏடிஜிபி விஜய் சாகரே ஒருங்கிணைத்து வருகிறார். “இரண்டு வழக்குகளையும் விசாரிக்க ஐந்து போலீஸ் குழுக்களை அமைத்துள்ளோம். திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொலை சம்பவங்களில் சில முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன" என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், பாலக்காட்டில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.
கேரள மின்சாரத்துறை மந்திரி கே.கிருஷ்ணன்குட்டி தலைமையில் கலெக்டர் அலுவலக அரங்கில் இன்று மாலை 3.30 மணிக்கு கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்கேற்பதை பா.ஜ.க மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்கள் உறுதி செய்துள்ளனர்.