டெல்லியில் இன்று தொடங்குகிறது ராணுவ உயர் அதிகாரிகளின் 5 நாள் மாநாடு

ராணுவ உயர் அதிகாரிகள் மாநாடு, ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்படுகிறது. ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் இவை நடைபெறும்.

Update: 2022-04-18 00:23 GMT
Image Courtesy: PTI
புதுடெல்லி, 

ராணுவ உயர் அதிகாரிகள் மாநாடு, ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்படுகிறது. ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் இவை நடைபெறும். பாதுகாப்புத்துறை, ராணுவ விவகாரங்கள் துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்த இது நல்ல வாய்ப்பாக அமைகிறது. ராணுவத்தில் முக்கியமான கொள்கை முடிவு எடுப்பதற்கு இந்த மாநாடு வழிவகுக்கிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ராணுவ உயர் அதிகாரிகளின் மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 22-ந் தேதிவரை, 5 நாட்கள் இம்மாநாடு நடைபெறும். ராணுவ தளபதி எம்.எம்.நரவானே தலைமை தாங்குகிறார். அவர் இம்மாதம் ஓய்வு பெறுவதால், அவர் பங்கேற்கும் கடைசி மாநாடு இதுவே ஆகும்.

இந்த மாநாட்டில், சீனாவுடனான 3 ஆயிரத்து 400 கி.மீ. நீள எல்லை கோட்டு பகுதியில் இந்திய ராணுவத்தின் தயார்நிலை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது. காஷ்மீர் நிலவரம், அங்கு பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகியவை பற்றியும் விவாதிக்கப்படுகிறது. ரஷியா-உக்ரைன் போர் குறித்தும், அப்போர் நமது பிராந்தியத்தில் ஏற்படுத்த வாய்ப்புள்ள தாக்கம் பற்றியும் பேசப்படுகிறது. சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைகளில், நாட்டின் பாதுகாப்புக்கான சவால்கள் பற்றியும் விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது.

ராணுவத்தின் தயார்நிலையை அதிகரிப்பது குறித்தும், ராணுவத்தின் திறன் மேம்பாட்டை வளர்ப்பது பற்றியும், எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. ராணுவத்துக்கு மின்சார வாகனங்கள் வாங்குவது உள்ளிட்ட நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்