டி.டி.வி.தினகரனிடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை 21-ந் தேதி ஆஜராகிறார்

இந்த விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-18 00:04 GMT
புதுடெல்லி,

இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில், டி.டி.வி. தினகரனிடம் அமலாக்கத்துறை 21-ந்தேதி மீண்டும் விசாரணை நடத்துகிறது.

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு தேர்தல் கமிஷன் அதிகாரி களுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி. தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜூனா கைது செய்யப்பட்டனர். மொத்தம் 9 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை தவிர மீதமுள்ளவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

இதைப்போல கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டி.டி.வி. தினகரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக கடந்த 12-ந்தேதி மீண்டும் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இதற்காக டெல்லி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆஜரான அவரிடம் 11 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தான் நிரபராதி என்றும், இந்த வழக்கில் தன்னை சிக்க வைப்பதற்காக சுகேஷ் சந்திரசேகர் மாற்றி மாற்றி பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கில் டி.டி.வி.தினகரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்காக வருகிற 21-ந் தேதி டெல்லி அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான அறிவிப்பை கடந்த 12-ந் தேதி விசாரணையின்போதே டி.டி.வி. தினகரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் டி.டி.வி.தின கரன் வருகிற 21-ந் தேதி டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்