பாட்டி வீட்டுக்கு செல்ல பெற்றோர்கள் அனுமதிக்காததால் சிறுவன் தீக்குளித்து தற்கொலை...!

பாலக்காடு அருகே பாட்டி வீட்டுக்கு செல்ல பெற்றோர்கள் அனுமதிக்காததால் 12 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை செய்து உள்ளார்.

Update: 2022-04-17 07:30 GMT
பாலக்காடு,

கேரள மாநிலம் கோட்டயம் பாம்பாடி பகுதியை சேந்தவர்கள் சரத்-சுனிதா தம்பதிகள். இவர்களது மகன் மாதவ்(வயது 12). இவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் மாணவன் மாதவ் பாட்டி வீட்டுக்கு செல்ல பெற்றோர்களிடம் அனுமதி கேட்டு உள்ளார். இதற்கு பெற்றோர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று தெரிகின்றது.

இதனால் கோபம் அடைந்த சிறுவன் மாதவ் சமையலறைக்கு சென்று மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 

அப்போது  அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள் மகன் மாதவ் உடம்பில் தீ பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், சிறுவனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.  மருத்துவமனையில் 80 சதவீத தீ காயத்துடன் சிறுவன் மாதவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சிறுவன் மாதவு தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதனை அறிந்த பாம்பாடி போலீசார்  சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

12 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்