டெல்லி: மத பேரணியின் போது மோதல், துப்பாக்கிச்சூடு - 9 பேர் படுகாயம்
டெல்லியில் மத பேரணியின் போது ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
டெல்லி,
இந்து மத கடவுளான அனுமனின் பிறந்தநாள் தினம் ’அனுமன் ஜெயந்தி’ என கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அனுமன் ஜெயந்தி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அனுமன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
அதேவேளை, வடமாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் அனுமன் ஜெயந்தியையொட்டி மத பேரணிகளும் நடைபெற்றது. இந்த பேரணியின் போது சில பகுதிகளில் வன்முறை, மோதல் சம்பவங்களும் அரங்கேறியது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் அனுமன் ஜெயந்தியையொட்டி இந்து மதத்தினர் பேரணியாக சென்றனர். இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் பேரணி சென்றபோது சிலர் பேரணி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால், அப்பகுதியில் திடீரென இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசியும், கட்டையை வீசியும், கூர்மையான ஆயுதங்களை கொண்டும் தாக்குதல் நடத்தினர். பேரணியின் போது பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடும் நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார். துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது யார்? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. மோதலில் போலீசார் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், மத பேரணியின் போது இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்ததால் ஜஹாங்கீர்பூர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதல் நடந்த பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், பொதுமக்கள் அமைதிகாக்கும்படியும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்த 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி கவர்னர் தெரிவித்துள்ளார்.