ஆந்திர பிரதேசம்: கோவில் திருவிழாவில் நிர்வாண நடனம்; வைரலான வீடியோவால் பரபரப்பு
ஆந்திர பிரதேசத்தில் கோவில் திருவிழாவில் நிர்வாண நடன நிகழ்ச்சியை நடத்தியதற்காக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிழக்கு கோதாவரி,
ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தள்ளரேவு மண்டலத்திற்கு உட்பட்ட உப்பங்கலா கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா ஒன்று கடந்த 14ந்தேதி நடைபெற்றது. நேற்று அதிகாலை வரை நடந்த இந்த திருவிழாவில் கிராமத்தில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், கோவில் திருவிழாவில் நிர்வாண நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது.
இதனை அறிந்த கொரிங்கா காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இதில், கடந்த 14ந்தேதி நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை 3 மணிக்கு இடையில் இந்த நடனம் அரங்கேறியுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுபற்றி போலீசார் கூறும்போது, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ளோம். வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மற்ற விவரங்களை சேகரித்து வருகிறோம் என தெரிவித்து உள்ளனர்.