ரசாயன ஆலையில் தீ விபத்து; உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

ஆந்திர பிரதேசத்தில் ரசாயன ஆலை தீ விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-04-14 03:52 GMT

அமராவதி,



ஆந்திர பிரதேசத்தின் எலூரு மாவட்டத்தில் முசுனுரு கிராமத்தில், அக்கிரெட்டிகுடெம் பகுதியில் ரசாயன ஆலை ஒன்று இயங்கி வருகிறது.  அந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் நேற்றிரவு பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஆலையில் இருந்து திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டு உள்ளது. நைட்ரிக் அமிலம் மற்றும் மோனோமெத்தனால் ஆகிய ரசாயனங்கள் கசிந்ததில் தீ விபத்து ஏற்பட்டது என கூறப்படுகிறது.  இந்த தீயானது, ரசாயன ஆலை முழுவதும் வேகமாக பரவியது.

இதுபற்றி தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  எனினும், இந்த தீ விபத்தில் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் சிக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.  ஒருவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து உள்ளார்.

இதுதவிர, 13 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த தீ விபத்து பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு விஜயவாடா மற்றும் நுஜிவீடு பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இந்த தீ விபத்தில் 2 தளங்கள் முற்றிலும் எரிந்து போயுள்ளன.  உயிரிழந்தவர்களில் 4 பேர் பீகாரை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் கவர்னர் பிஸ்வாபூஷண் ஹரிசந்தன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, முதல்-மந்திரி வெளியிட்டுள்ள செய்தியில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.  படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், லேசான அளவில் காயமுற்றோருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்