அரசியல் கட்சி நிர்வாகி கலப்பு திருமணம் - கேரளாவில் வெடித்த சர்ச்சை...!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியும், நர்சும் கலப்பு திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில் இது தொடர்பாக அரசியல் ரீதியில் சர்ச்சை எழுந்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தேயப்பரா பகுதியை சேர்ந்தவர் யோஷ்னா மேரி ஜோசப். கிருஸ்தவ மதத்தை சேர்ந்த இவர் சவுதி அரேபியாவில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இதற்கிடையில், யோஷ்னா மேரிக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். திருமண நிச்சயதார்த்தத்திற்காக யோஷ்னா கடந்த 2 வாரங்களுக்கு முன் சவுதியில் இருந்து கேரளா வந்தார்.
ஆனால், திருமண நிச்சயதார்த்தத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் யோஷ்னா பெற்றோருக்கு தெரியாமல் திடீரென வீட்டை விட்டு வெளியேறி ஷஜீன் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஷஜீன் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் கோழிக்கோடு மாவட்டம் கண்ணோத் பகுதி தலைவராக செயல்பட்டு வருகிறார். யோஷ்னா மற்றும் ஷஜீன் 7 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
பெற்றோர் வேறு நபருடன் திருமணம் செய்துவைக்க இருந்ததால் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய யோஷ்னா ஷஜீனை திருமணம் செய்துகொண்டார். கிருஸ்தவம் - இஸ்லாம் மதங்களை சேர்ந்த இருவரும் கலப்புத்திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில் இந்த திருமணத்திற்கு யோஷ்னாவின் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தனது மகளை காணவில்லை என யோஷ்னாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால், ஷஜீன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் யோஷ்னாவின் பெற்றோர், உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதேபோல், யோஷ்னாவை லவ் ஜீகாத் எனப்படும் இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நோக்கத்தோடு ஷஜீன் திருமணம் செய்துகொண்டதாக யோஷ்னாவின் பெற்றோரும், உறவினர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதேவேளை, தனது சொந்த விருப்பத்தின் பெயரிலேயே ஷஜீனை திருமணம் செய்துகொண்டதாக யோஷ்னா கூறியுள்ளார். ஆனால், ஷஜீன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தத்தாலேயே தங்கள் மகள் இவ்வாறு கூறுவதாக யோஷ்னாவின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் கோர்ட்டிற்கு சென்ற நிலையில் யோஷ்னாவும், ஷஜீனும் இணைந்து வாழ எந்த தடையும் இல்லை என கோர்ட்டு தெரிவித்துள்ளது. இந்த கலப்பு திருமண விவகாரம் கேரள அரசியலில் பூதாகரமாகியுள்ளது. பல்வேறு கட்சிகளும் இந்த விவகாரத்தில் பலத்தரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இதனால், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் நிர்வாகியான இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஷஜீன் மற்றும் கிருஸ்தவ மதத்தை சேர்ந்த யோஷ்னாவின் திருமணம் கேரள அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.