பணியிட மாறுதலுக்காக தனது மனைவியை ஓர் இரவு அனுப்புமாறு கேட்ட மேலதிகாரி; விரக்தியில் ஊழியர் தீக்குளித்து பலி!

பணியிட மாறுதல் கோரிய ஊழியரிடம் அவருடைய மனைவியை தன்னுடன் அனுப்பிவைக்க சொன்ன மேலதிகாரியின் வீட்டின்முன் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-04-12 08:24 GMT
கோப்புப்படம்
லகிம்பூர்கேரி, 

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர்கேரி மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லியா துணை மின்நிலையத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தவர் கோகுல் (வயது 42). 

சமீபத்தில் இவர் அலிகஞ்சு பகுதிக்கு மாற்றப்பட்டார். எனவே மீண்டும் பல்லியாவுக்கு இடமாற்றம் செய்யுமாறு தனது மேலதிகாரியான இளநிலை என்ஜினீயர் நாகேந்திர சர்மாவுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். 

ஆனால் இதற்கு ரூ.1 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என கோகுலிடம் நாகேந்திர சர்மா கேட்டார். அத்துடன் கோகுலின் மனைவியை ஒருநாள் இரவு முழுவதும் தனது வீட்டுக்கு அனுப்புமாறும் கீழ்த்தரமாக கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்த கோகுல், பல்லியாவில் உள்ள நாகேந்திர சர்மாவின் வீட்டின் முன், கடந்த 9-ந்தேதி தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக அவர் ஏற்கனவே வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர், மின்வாரிய ஊழியர் கொலைக்கு காரணமான அதிகாரி நாகேந்திர சர்மாவையும், மற்றொரு லைன்மேனான ஜகத்பால் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்