எகிப்து நாட்டில் பதுங்கியிருந்த நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் கைது! இன்று மும்பை கோர்ட்டில் ஆஜர்
தலைமறைவாக இருந்த நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் சங்கரை எகிப்து நாட்டில் சிபிஐ அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
மும்பை,
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2018ஆம் ஆண்டில் மிகப் பெரிய நிதி மோசடி அம்பலமானது. மும்பையைச் சேர்ந்த நீரவ் மோடி என்ற வைர வியாபாரி தனது உறவினர்களுடன் சேர்ந்து போலியான ஆவணங்களைக் கொண்டு ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பியோடிவிட்டார்.
சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி இருந்த அவர் பாதி பணத்தை வங்கிகளுக்கு திருப்பி செலுத்தவில்லை. 13 ஆயிரத்து 578 கோடி ரூபாய் அவர் கடன் மோசடி செய்ததாக வங்கிகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
இதை அறிந்ததும் நீரவ் மோடியும் அவரது குடும்பத்தினரும் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். லண்டனில் தலைமறைவாக இருந்த அவர் 2019ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டார். இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அங்கு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நீரவ் மோடியின் மிக முக்கிய நெருங்கிய கூட்டாளி சுபாஷ்சங்கர் எகிப்து நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று அவரை எகிப்து தலைநகர் கெய்ரோவில் கைது செய்தனர்.
நீரவ் மோடியின் பெரும்பாலான பண பரிவர்த்தனைகளை சுபாஷ்சங்கர்தான் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை மும்பை அழைத்து வந்துள்ளனர்.
2018ம் ஆண்டில் இந்த வழக்கு தொடங்கியது முதலே இந்த சுபாஷ் சங்கர் தலைமறைவாகவே இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது வசமாக சிக்கியுள்ள இவர், மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் மதியம் 12 மணிக்கு ஆஜர்படுத்தப்படுகிறார். அதன் பிறகு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவார்கள். இதன் மூலம் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.