குஜராத் ரசாயன தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு

குஜராத்தின் பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-11 10:55 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

குஜராத் மாநிலம் பருச் பகுதியில் செயல்பட்டு வரும் இயற்கை ரசாயனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வெடி விபத்து  ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அந்த ஆலையில் பணியாற்றி வந்த 6 பணியாளர்கள் உயிரிழந்தனர்.

ஆலையில் உள்ள ரசாயன உலை திடீரென வெடித்து சிதறியது. இதன் காரணமாக தொழிற்சாலையில் தீப்பற்றிக் கொண்டது. வெடித்து சிதறிய உலையின் அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த 6 தொழிலாளர்களும் பரிதாபமாக  உயிரிழந்தனர். அவர்களுடைய உடல்கள் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில்,  குஜராத்தின் பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 வீதம் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;

“பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த துயரருற்றதாக குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமது இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்