வீட்டில் தாக்குதல் நடந்ததை அடுத்து சுப்ரியா சுலே எம்.பி. பாதுகாப்பு அதிகரிப்பு

வீட்டில் தாக்குதல் நடந்தை அடுத்து சுப்ரியா சுலே எம்.பி.யின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-09 20:04 GMT
சரத்பவார் வீடு தாக்குதல்

மராட்டியத்தில் மாநில போக்குவரத்து கழகத்தை, மாநில அரசுடன் இணைக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வரும் ஊழியர்கள் நேற்று முன்தினம் திடீரென மும்பையில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது வீட்டில் இருந்த அவரது மகள் சுப்ரியா சுலே எம்.பி. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சாமாதானப்படுத்த முயற்சி செய்தார். எனினும் அவர்கள் கேட்காமல் கோஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையே போலீசார் போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்கள், அவர்களது வக்கீல் என 110 பேரை கைது செய்து உள்ளனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு

இந்த சம்பவத்தை அடுத்து சரத்பவாரின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. தற்போது அவருக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சரத்பவார் வீட்டின் மீது நடந்த தாக்குதலை அடுத்து அவரது மகள் சுப்ரியா சுலே எம்.பி.யின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது ‘ஒய் பிளஸ்’ ஆக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், " சுப்ரியா சுலே பாதுகாப்பு ஒய் பிளசாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பையில் அவரது வீட்டை போல புனே பாரமதியில் உள்ள அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

இதற்கிடையே சரத்பவாரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதாக உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீல் தெரிவித்தார். பாதுகாப்பு விஷயத்தில் கவனக்குறைவாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்