2024-ம் ஆண்டுக்குள் ரேஷன் கடைகளில் ஊட்டச்சத்து அரிசி வினியோகம்..!!

2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ஊட்டச்சத்து மிக்க அரிசியை வினியோகிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

Update: 2022-04-09 01:23 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரேஷன் கடைகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க அரிசியை படிப்படியாக வினியோகிக்க பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது.

இத்திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 700 கோடி செலவாகும். திட்டம் முழுமையாக 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரும்வரை முழு செலவையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும்.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களின் கீழ் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்திய உணவு கழகம் மற்றும் மாநில அமைப்புகள், ஊட்டச்சத்து மிக்க அரிசியை கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை 88 லட்சம் டன் அரிசியை கொள்முதல் செய்துள்ளன.

பெண்கள், குழந்தைகள், பாலூட்டும் தாய்மார் போன்றவர்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையை தவிர்க்க அரிசியை ஊட்டச்சத்து மிக்கதாக மாற்றி ஒவ்வொரு ஏழைக்கும் வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். அதன்படி, இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததை தொடர்ந்து, அந்த சுரங்கங்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டன. நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், ஒதுக்கீடு பெற்ற பல பொதுத்துறை நிறுவனங்கள், சுரங்க பணியை தொடங்கவில்லை. எனவே, செயல்படாமல் வைத்துள்ள நிலக்கரி சுரங்கங்களை அபராதம் இன்றி திரும்ப ஒப்படைக்க ஒருமுறை வாய்ப்பு அளிக்கும் மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது.

திரும்ப ஒப்படைக்க மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு 3 மாத கால அவகாசம் அளிக்கப்படும். இந்த சுரங்கங்கள், தற்போதைய ஏல கொள்கைப்படி ஏலம் விடப்படும்.

பள்ளி, பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை மட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக அடல் இன்னோவேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை 2023-ம் ஆண்டுவரை தொடர மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துக்கும் (செபி) மங்கோலியாவுக்கும் இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

தொழில்நுட்ப உதவிகளை பகிர்ந்து கொள்வதற்காக இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது. ‘செபி’ போன்ற சர்வதேச அமைப்பான நிதி ஒழுங்குமுறை ஆணையமும் இதில் கையெழுத்திடும்.

மேலும் செய்திகள்