மதமாற்றத்தில் ஈடுபட்டதாக டாக்டர் மீது மருத்துவமனை ஊழியர் புகார்
தன்னை மதம் மாற்றியதாக டாக்டர் மீது மருத்துவமனை ஊழியர் புகார் அளித்துள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டம் இட்வா நகரில் தனியார் மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையை டாக்டர் ஃபரூகி கமல் நடத்தி வருகிறார். அந்த மருத்துவமனையில் ராம்ராஜ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேலை செய்து வந்தார்.
இதற்கிடையில், டாக்டர் ஃபரூகி கமல் தன்னை 2019-ம் ஆண்டு இஸ்லாமிய மதத்திற்கு மாற்றியதாக ராம்ராஜ் போலீசில் புகார் அளித்துள்ளார். கமல் தன்னை இஸ்லாமிய மத புனித நூல் குர்ஆனை கட்டாயப்படுத்தி வாசிக்க வைத்ததாகவும் மேலும் தனது பெயரை ஹரம் ஹூசேன் என மாற்றி அந்த பெயரை ஆதார் அடையாள அட்டையில் பதிவு செய்துவிட்டதாகவும் டாக்டர் மீது அவர் குற்றஞ்சாட்டினர்.
அதேபோல், டுமரியாகஞ்ச் என்ற பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னை மற்றொரு மதத்திற்கு மாற்றியதாகவும் ராம்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மொபைல் போனை திருடியதாக ராம்ராஜ் மீது புகார் கொடுக்கப்பட்டு அவர் சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது ராம்ராஜ் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் தன்னை மதம் மாற்றியதாக டாக்டர் ஃபரூகி கமல், மற்றொருவர் (பெயர் குறிப்பிடப்படவில்லை) மீது ராம்ராஜ் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக டாக்டர் மற்றும் மற்றொருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.