அசாம், மும்பையில் நூதன முறையில் போதை பொருள் கடத்தல்
அசாம் மற்றும் மும்பையில் கோடிக்கணக்கான மதிப்புடைய ஹெராயின் வகை போதை பொருளை நூதன முறையில் கடத்திய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை,
அசாமின் கரீம்கஞ்ச் நகரில் ஆர்.கே. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த டாடா சுமோ காரை மடக்கி போலீசார் நேற்றிரவு 10 மணியளவில் சோதனையிட்டனர். அதில், காரில் 4 ரகசிய அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்துள்ளன.
அதனை தீவிர சோதனை செய்ததில், 175 சோப்பு டப்பாக்கள் இருந்துள்ளன. அதனுள் ஹெராயின் வகையை சேர்ந்த போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. 2.275 கிலோ எடை கொண்ட இதன் சந்தை மதிப்பு ரூ.18 கோடி என போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கரீம்கஞ்ச் போலீசார் காரில் இருந்த 4 பேரை கைது செய்தனர். அவர்களில் தப்பியோட முயன்ற ஒருவரை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதேபோன்று, மராட்டியத்தின் மும்பை நகரில் நூதன முறையில் பெண் ஒருவர் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். தண்ணீர் குடிக்கும் 2 கேன்களில் ஹெராயின் வகை போதை பொருளை மறைத்து எடுத்து சென்றுள்ளார்.
1 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.