பஞ்சாப்: ஆட்டோ ஓட்டுனர்கள் மந்திரி பதவியில்... அரியானா மந்திரி சர்ச்சை பேச்சு
பஞ்சாப் ஆம் ஆத்மி அரசில் மொபைல் ரிப்பேர் செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லாம் மந்திரி பதவியில் உள்ளனர் என பேசி அரியானா மந்திரி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார்.
சண்டிகார்,
பஞ்சாப்பில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.
அவரது அமைச்சரவையில் ஒரு பெண் உள்பட 10 பேர் மந்திரிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், அரியானா மின்துறை மந்திரி ரஞ்சித் சிங் இன்று பேசும்போது. பஞ்சாப்பில் நிதி நிலைமை மிக மோசம் அடைந்து உள்ளது. அவர்கள் (ஆம் ஆத்மி மந்திரிகள்) அனுபவம் அற்றவர்கள்.
அவர்களில் ஒருவருக்கு கூட அரசியல் முன்அனுபவம் என்பது இல்லை. மந்திரிகளில் 90% பேர் சட்டசபையை இதுவரை பார்த்தது கூட இல்லை. அவர்களில் சிலர் மொபைல் போன் ரிப்பேர் செய்பவர்களாகவும், ஒரு சிலர் ஆட்டோ ஓட்டுனராகவும் உள்ளனர் என கூறி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.