கேரளா: கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்; முககவசம் அணிதல் தொடரும்
கேரளாவில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு முககவசம் அணிதலுக்கான அறிவுறுத்தல் நீடிக்கும் என அரசு அறிவிப்பு வெளிவந்து உள்ளது.
திருவனந்தபுரம்,
நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து பகுதிகளிலும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் தீவிரம் நாடு முழுவதும் குறைந்து காணப்படுகிறது. இதனை முன்னிட்டு, இதற்கு முன் விதிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் பல பகுதிகளில் தளர்த்தப்பட்டு உள்ளன.
எனினும், கொரோனா முதல் மற்றும் 2வது அலை, ஒமைக்ரான் பாதிப்புகள் குறைந்தபோதிலும், கேரளாவில் எண்ணிக்கை குறையாமல் இருந்து வந்தது. இதனால், தளர்வுகள் அறிவிப்பது தள்ளி போனது.
இந்த நிலையில், அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகின்றன என கேரள அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுபற்றிய அரசின் அறிவிப்பில், நடப்பு கொரோனா சூழலின் பரவல் மற்றும் அமலில் உள்ள கட்டுப்பாட்டு உத்தரவுகள் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்த பின்னர், பேரிடர் மேலாண் துறையின் கீழ் அரசால் அறிவிக்கப்பட்டு அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் உடனடியாக நீக்கப்படுகின்றன.
அதற்கான ஆணை வெளியிடப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான அறிவுறுத்தல்களான, முக கவசங்களை அணிதல் மற்றும் கைகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்து உள்ளது.