பா.ஜ.க மக்களிடையே மோதலை உருவாக்கி கலவரத்தை தூண்டுகிறது; ராஜஸ்தான் கேபினட் மந்திரி பிரதாப் சிங்
ஜெய்ப்பூரில் விலைவாசி அதிகரித்து வருவதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில், விலைவாசி அதிகரித்து வருவதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் பங்கேற்ற அம்மாநில கேபினட் மந்திரி பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக குற்றம்சாட்டினார். அவர் கூறியதாவது,
“விலைவாசி உயர்வால் நாடு முழுவதும் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். வேலையின்மை மற்றும் பணவீக்கம் காரணமாக நாடு முழுவதும் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ஆனால், பா.ஜ.க மக்களிடையே மோதலை உருவாக்கி கலவரத்தைத் தூண்டுகிறது” என்றார்.
ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த் சிங் தோதசரா கூறியதாவது,
“விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஆனால், மோடி அரசை அது பாதிக்கவில்லை. மத்திய அரசு திறமையற்றது. மத நல்லிணக்கத்தை எவ்வாறு சீர்குலைப்பது என்பதே அவர்களுக்கு தெரிந்த விஷயம்.
கரவ்லியில் நடைபெற்ற மத ஊர்வலத்தின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
சமீபத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஜஸ்தானின் கரவ்லி பகுதியில் ஏற்பட்ட மத கலவரத்தில், பல கட்டிடங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.