மாநிலங்களவையிலும் நிறைவேறிய குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா..!!
குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது
புதுடெல்லி,
தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளின் கைரேகை, விரல் ரேகை, பாத அளவு, புகைப்படம், கண்ணின் கருவிழி போன்ற ‘பயோ மெட்ரிக்’ அளவுகளை சேகரிக்க போலீசாருக்கு அதிகாரம் அளிக்கும் குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா, ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், மாநிலங்களவையில் இம்மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
கிரிமினல்களை விட போலீசார் எப்போதும் 2 படி முன்னால் இருக்க வேண்டும் என்பதற்காக, இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்கும் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டால், அவர்களின் ‘பயோமெட்ரிக்’ அளவுகள் சேகரிக்கப்படாது.
தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக சேமிக்கப்படும். இந்த மசோதா, யாருடைய தனியுரிமையையும் மீறுவதாக இருக்காது என்று அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால், இரு அவைகளின் ஒப்புதலையும் பெற்று விட்டது.