நான் யாரையும் திட்டியதில்லை, என் குரலே அப்படித்தான்; மக்களவையில் சிரிப்பை ஏற்படுத்திய அமித்ஷாவின் பேச்சு!
தனது உயர்ந்த, சத்தம் மிகுந்த குரல், கோபத்தை பிரதிபலிக்கவில்லை என்று அமித் ஷா தெளிவுபடுத்தினார்.
புதுடெல்லி,
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மக்களவையில், தனது உயர்ந்த, சத்தம் மிகுந்த குரல், கோபத்தை பிரதிபலிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். அவரது இந்த பேச்சு உறுப்பினர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியது.
இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, மக்களவை உறுப்பினர் தாதாவுக்கு, மந்திரி அமித் ஷா கோபமான தொனியில் பதிலளித்தார் என்று திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் இலகுவாக கிண்டல் செய்தார்.
அதற்கு அமித் ஷா, “காஷ்மீர் தொடர்பான கேள்விகளைத் தவிர எனக்கு கோபம் வராது. நான் யாரையும் திட்டியதில்லை. என் குரல் கொஞ்சம் உயர்ந்தது” என்று தனது பதிலால் அனைவரையும் சிரிக்க வைத்தார்.
குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யும் அடுத்தகட்ட நடவடிக்கையின் போது இந்த சுவாரசிய சம்பவம் நடைபெற்றது.
இந்த மசோதா குறித்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசினார். இந்த மசோதா தண்டனை விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று தெளிவுபடுத்தினார்.