போலீசாரை தாக்கி விட்டு உத்தரபிரதேச கோவிலுக்குள் நுழைய முயன்ற ஐஐடி பட்டதாரி கைது
போலீசாரை தாக்கி விட்டு உத்தரபிரதேச கோவிலுக்குள் நுழைய முயன்ற ஐஐடி பட்டதாரியை போலீசார் கைது செய்து உள்ளனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலுக்கு வெளியே ஐஐடி பட்டதாரி ஒருவர் இரண்டு போலீஸ்காரர்களை தாக்கி, மத கோஷங்களை எழுப்பியவாறு கோவிலுக்குள் நுழைய முயன்றார்.போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமைப் பூசாரியாக இருக்கும் கோரக்நாத் மடத்தின் தலைமையகம் தான் இந்த கோரக்நாத் கோவில்.
இது குறித்து போலீசார் கூறும் போது பிடிபட்டவர் பெயர் முர்தாசா கோரக்பூரில் வசிப்பவர், புகழ்பெற்ற ஐஐடி (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) மும்பையில் 2015-ல் பட்டம் பெற்றவர். அவரிடம் இருந்து லேப்டாப், போன், டிக்கெட் ஆகியவை கைப்பற்றப்பட்டன என கூறி உள்ளனர்.
இதுகுறித்து சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் பிரசாந்த் குமார் கூறும் போது
அந்த நபரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களில் இருந்து பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரிகிறது, இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது.தற்போது எங்கள் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, உள்ளூர் போலீசார் இப்போது விசாரித்து வருகின்றனர் என்று கூறினார்.