ராஜஸ்தான்: பைக் பேரணியின் போது இரு தரப்பினர் இடையே மோதல் - ஊரடங்கு அமல்
ராஜஸ்தானில் பைக் பேரணியின் போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்துள்ளது.
ஜெய்ப்பூர்,
வட இந்தியாவில் இந்து மதத்தினரின் புத்தாண்டு தினம் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் கருவ்லி மாவட்டத்தில் இந்து மதத்தினர் சிலர் புத்தாண்டை கொண்டாடும் வகையில் பைக் பேரணி நடத்தினர். காவிக்கொடிகளுடன் கருவ்லி நகரில் பைக்கில் ஊர்வலமாக சென்றனர்.
அந்த பேரணி இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி அருகே உள்ள இஸ்லாமிய மத வழிப்பாட்டு தளம் அருகே வந்தது. அப்போது, இந்து மதத்தினர் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தோடு, ஸ்பீக்கரில் பாடல்களை இசைத்தவாறு இஸ்லாமிய மத வழிபாட்டுத்தளம் அமைந்துள்ள பகுதியை கடக்க முற்பட்டனர்.
அப்போது, அந்த பேரணியில் பங்கேற்றவர்கள் மீது அப்பகுதியில் இருந்த வீடுகளின் மொட்டை மாடிகளில் இருந்து சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு அது வன்முறையாக மாறியது. பைக்குகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், கருவ்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த வன்முறையில் 35 பேர் படுகாயமடைந்தனர். மேலும், வன்முறை தொடர்பாக இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதால் வன்முறை பரவாமல் இருக்க கருவ்லியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. மேலும், இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.