வளர்ச்சி பணிகளுக்கு தடை போடுவதாக மத்திய அரசு மீது தாக்கரே குற்றச்சாட்டு
வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு தடை போடுவதாக குற்றம் சாட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை பெற நாங்கள் பிச்சை கேட்கவில்லை என்றும் ஆவேசமாக பேசினார்.
ஜி.எஸ்.டி. நிலுவை தொகை
மும்பையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, அதில் பயணம் செய்ததை படத்தில் காணலாம். உடன் துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரிகள் ஏக்நாத் ஷிண்டே, ஆதித்ய தாக்கரே உள்ளனர்.
மும்பை, ஏப்.3-
மும்பையில் தகிசர் கிழக்கு - அந்தேரி இடையே மெட்ரோ -7 திட்டப்பணிகளும், தகிசர் கிழக்கு - மந்தாலே இடையே 2ஏ திட்டப்பணிகளும் நடந்து வருகிறது.
தொடங்கி வைத்தார்
இந்த 2 திட்டங்களிலும் முதல் கட்ட பணிகள் முடிந்து உள்ளது. இந்தநிலையில் நேற்று முதல் - மந்திரி உத்தவ் தாக்கரே ஆரே மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில், 2ஏ திட்டத்தில் தகிசர் கிழக்கு - தகானுகர்வாடி இடையேயும், 7-வது திட்டத்தில் தகிசர் கிழக்கு - ஆரே வரையிலும் மெட்ரோ ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். அவருடன் துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரி ஆதித்ய தாக்கரே உள்ளிட்டவர்களும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.
பரபரப்பு குற்றச்சாட்டு
இதையடுத்து நடந்த விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசுகையில், வளர்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக பரபரப்பு குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் பேசியதாவது:-
சிலர் மெட்ரோ ரெயில் திட்டத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பெயரை நான் எடுத்து கொண்டதாக கூறுகின்றனர். நான் அந்த பெயரை அவர்களுக்கு கொடுக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் மும்பையை விரும்பினால், ஏன் மாநில அரசு மெட்ரோ 3-வது திட்டத்துக்காக காஞ்சூர்மார்க்கில் பணிமனை கட்டுவதை நிறுத்தி வைத்து இருக்கிறீர்கள்?. தாராவி குடிசை பகுதியை சீரமைக்க ரெயில்வே அதன் நிலத்தை ஏன் தராமல் உள்ளது. மும்பையில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க நிலம் கேட்கிறோம். ஆனால் அது நமக்கு மறுக்கப்பட்டுள்ளது.
பிச்சை கேட்கவில்லை
நான் இன்று ஜி.எஸ்.டி. பவன் பணியை தொடங்கி வைத்தேன். நாட்டிலேயே மராட்டியம் தான் அதிக ஜி.எஸ்.டி.யை தருகிறது. ஆனால் நமது ஜி.எஸ்.டி. பாக்கி நமக்கு உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை. நாங்கள் பிச்சை கேட்கவில்லை. வரியில் எங்களுக்கு உள்ள பங்கின் உரிமையை கேட்கிறோம். ஆனால் அது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மெட்ரோ ரெயில் நிலையங்கள்
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தாக்கரே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்த தகிசர் கிழக்கு - தகானுகர்வாடி இடையே ஆனந்த் நகர், கந்தர்பாடா, மன்டபேஷ்வர், எக்சார், போரிவிலி மேற்கு, பகாடி எக்சார், காந்திவிலி மேற்கு ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன.
இதேபோல தகிசர் கிழக்கு - ஆரே இடையே ஒவரிபாடா, ராஷ்ட்ரிய உதயான், தேவிபாடா, மகாதானே, பொய்சர், ஆக்குர்லி, குரார், தின்தோஷி ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன.