நவாஸ் செரீப் நேபாளத்தில் நரேந்திர மோடியை ரகசியமாக சந்தித்தார் -இம்ரான்கான் குற்றச்சாட்டு
நவாஸ் செரீப் நேபாளத்தில் நரேந்திர மோடியை ரகசியமாக சந்தித்தார் -இம்ரான்கான் குற்றச்சாட்டு
புதுடெல்லி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த சூழலில், அதன்மீது வருகிற 3ந்தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும்.
இம்ரான் கான் தற்போது தனது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறார். அவரது கூட்டணி கட்சிகள் இரண்டும் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்று எதிர்க்கட்சி வரிசையில் சேர்ந்து விட்டன.
இந்த நிலையில் இம்ரான் கான் ஆற்றிய உரையில் இந்திய பத்திரிகையாளர் பர்கா தத்தை குறிப்பிட்டு பேசினார். இது நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன்னதாக அவரது பிரியாவிடை உரை என பலரால் நம்பப்படுகிறது.
பர்கா தத்தின் புத்தகத்தை மேற்கோள்காட்டி, பாகிஸ்தான் பிரதமர், முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பிரதமர் மோடியை நேபாளத்தில் ரகசியமாகச் சந்திந்தார் என்று இம்ரான் கான் கூறினார்.
பர்கா தத்தின் புத்தகத்தில் அவர் (நவாஸ் செரீப்) தனது சொந்த ராணுவத்திடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நேபாளத்தில் நரேந்திர மோடியுடன் ரகசிய சந்திப்புகளை நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது,” என்று கான் கூறினார்.
இது தவிர, கான் தனது அரசாங்கத்தை கவிழ்க்க ஒரு வெளிநாட்டு சதி நடப்பதாக கூறினார். தனது அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு "வெளிநாட்டு சதிகாரர்களுடன்" ஒத்துழைக்கும் எதிரிகள் நாட்டிற்குள் இருப்பதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
முன்னதாக, லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவரான ஹபீஸ் சயீத், 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் சேனலுக்கு அளித்த பேட்டியில் பர்கா தத்தை பாராட்டியிருந்தார்.