ஆந்திரா: கர்ப்பிணி பெண்கள், தாய்மார்களின் போக்குவரத்துக்காக 500 இலவச வாகனங்கள் அறிமுகம்
இந்த வாகனங்களை விஜயவாடாவில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விஜயவாடா,
ஆந்திரப் பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண்கள், தாய்மார்கள் மற்றும் கைக்குழந்தைகளுக்காக இலவச போக்குவரத்துக்காகவும், மருத்துவ அவசரங்களைச் சமாளிப்பதற்காகவும், ஜிபிஎஸ் மற்றும் மேம்பட்ட உபகரணங்கள் பொருத்தப்பட்ட 500 வாகனங்கள் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை விஜயவாடாவில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆரோக்யா ஆசரா திட்டத்தின் கீழ், சிசேரியன் சிகிச்சைக்கு 3,000 ரூபாயும், சாதாரண பிரசவத்திற்கு 5,000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
"டாக்டர் ஒய்எஸ்ஆர் தளி பித்தா எக்ஸ்பிரஸ்" திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 30 வாகனங்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனையில் இருந்து பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளை பாதுகாப்பாக வீடுகளுக்கு அழைத்து செல்ல முடியும்.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு நான்கு லட்சம் பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.