தேசிய கல்வி கொள்கை; தொலைதூர ஆசிரியரின் அறிவுரைகளும் ஏற்பு: பிரதமர் மோடி

தேசிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தில் தொலைதூர பகுதியை சேர்ந்த ஆசிரியர் மற்றும் மாணவரின் அறிவுரைகளும் ஏற்கப்படுகின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2022-04-01 07:43 GMT


புதுடெல்லி,



நாடு முழுவதும் தேர்வுக்கு தயாராக கூடிய மாணவ மாணவிகள் அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ளும் வகையில், டெல்லியில் உள்ள டாகடோரா ஸ்டேடியத்தில் இருந்து பரீக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இன்று பேசி வருகிறார்.

அவர் கூறும்போது, ஆன்லைன் கல்வியானது, அறிவை பெற்று அதனை அடையும் கொள்கையை அடிப்படையாக கொண்டது.  நேரிடையாக வகுப்புக்கு சென்று படிக்கும் (ஆப்லைன் கல்வியானது), அறிவை வைத்து கொண்டு அதனை நடைமுறைப்படுத்தி பார்ப்பது என கூறியுள்ளார்.

தேசிய கல்வி கொள்கையை வரைமுறைப்படுத்தும் பணியில் பலர் ஈடுபட்டு உள்ளனர்.  கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக அதற்காக ஒரு குழுவாக சேர்ந்து அனைத்து உறுப்பினர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

நவீன அறிவு திறனுடன் கூடிய தொலைதூர பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து வரும் அறிவுரைகளையும் நாங்கள் எடுத்து கொள்கிறோம்.

உலகம் முழுவதும் திறமைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.  தொழில்நுட்பம் ஒரு தடையல்ல.  அதனை திறமையாக பயன்படுத்த வேண்டும்.  இன்றைய மாணவர்கள் 3டி பிரிண்டர்களை உருவாக்குகின்றனர்.

வேதகால கணிதத்திற்கான செயலிகளை கண்டறிகின்றனர்.  தொழில்நுட்பத்தினை அவர்கள் திறமையாக பயன்படுத்துகின்றனர் என கூறியுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமென்ற அழுத்தத்தில் நாம் இருக்கிறோம் என்ற உணர்வு மாணவர்களுக்கு ஏற்பட கூடாது.  அவர்களுடைய வருங்காலம் பற்றி முடிவு செய்யும் சுதந்திரம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்