குஜராத்தில் ராஜ்கோட் விமான நிலையம் ஆகஸ்டில் செயல்பாட்டுக்கு வரும்
குஜராத்தில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், ராஜ்கோட் சர்வதேச விமான நிலையம் ஆகஸ்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்கோட்,
குஜராத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டின் டிசம்பரில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. கடந்த 1995ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பா.ஜ.க. உள்ளது. 6வது முறையாக ஆட்சியை பிடித்து விடும் முனைப்பில் அக்கட்சி உள்ளது.
இந்த நிலையில், தொழில் நகரான ராஜ்கோட்டில் இருந்து 30 கி.மீ. தொலைவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ரூ.1,405 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த விமான நிலையத்திற்கு கடந்த 2018ம் ஆண்டு மோடி அரசு ஒப்புதல் அளித்தது. இதற்காக பிரதமர் மோடி கடந்த 2017ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.
1,032 ஹெக்டேர் பரப்பளவில் 4 கட்டங்களாக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 14 நிறுத்தும் இடங்களுடன் 23 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு பயணிகளுக்கான முனையம் அமைக்கப்படும்.
இதுபற்றி ராஜ்கோட் மாவட்ட மாஜிஸ்திரேட் அருண் மகேஷ் பாபு கூறும்போது, 85 சதவீத ஓடுபாதை பணிகள் முடிந்து விட்டன. ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும்.
இதனால், பட்டு மற்றும் செராமிக் உற்பத்தி பொருட்கள் விரைவாக சரக்கு விமானத்தில் கொண்டு செல்ல வசதியாகவும் இருக்கும். மொத்தம் 13 விமானங்கள் புறப்பட்டு கொல்கத்தா, டெல்லி, மும்பை, கோவா போன்ற இடங்களுக்கு செல்கின்றன.
புதிய விமான நிலையம் செயல்பாட்டிற்கு வந்ததும் ஒரு மணிநேரத்திற்கு 7 விமானங்கள் என்ற எண்ணிக்கையில் சேவை அதிகரிக்கப்படும். வெளிநாட்டு சுற்றுலா படிப்பு மற்றும் வெளிநாடு வாழ்இந்தியர்கள் பல்வேறு இணைப்பு விமானங்களை பிடிப்பதற்கு பதிலாக நேரடியாக இந்த புதிய விமான நிலையத்தினை பயன்படுத்தி இந்த பகுதிக்கு வந்து சேரலாம் என அவர் கூறியுள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டில் நடைபெற உள்ள சூழலில், இந்த புதிய ஹிராசர் விமான நிலையம் அல்லது ராஜ்கோட் சர்வதேச விமான நிலையம் ஆகஸ்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெரிய வளர்ச்சிக்கான திட்டம் செயல்பாட்டுக்கு வருவது, குஜராத்தில் தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்கும் வகையில் அமையும் என கூறப்படுகிறது.