பிரதமர் மோடியின் படத்தை வீட்டில் மாட்டியிருந்ததால் வீட்டை காலி செய்ய சொன்ன வீட்டின் உரிமையாளர்!
இந்த விஷயம் சற்று வினோதமாக போலீசாருக்கு தோன்றியது. அந்த வீட்டின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் அதிர்ச்சி காத்திருந்தது.
இந்தூர்,
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரின் பீர் காலி பகுதியில் வசித்துவரும் யூசுப் கான் என்ற நபர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் அப்பகுதி போலீசிடம் சென்று புகார் அளித்தார். அதில் கூறப்பட்ட தகவல் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகாரில் தெரிவித்திருப்பதாவது:-
“நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும். அதனால் அவருடைய புகைப்படத்தை வீட்டின் சுவரில் மாட்டியிருந்தேன்.
இந்த விஷயத்தை அறிந்த வீட்டின் உரிமையாளர்கள் யாகூப் மன்சூரி, சுல்தான் மன்சூரி, ஷரீப் மன்சூரி பிரதமரின் படத்தை அகற்றுமாறு கூறினர். மேலும் நான் சங்கிகளின் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறி, இல்லையென்றால் அடி விழும். தப்பிக்க முடியாது என்றனர்.
ஆனால், பிரதமரின் படத்தை மாற்றுவதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். அப்படியானால், வீட்டை காலி செய்துவிடுமாறு மிரட்டினர்.”
இவ்வாறு அந்த புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த விஷயம் சற்று வினோதமாக போலீசாருக்கு தோன்றியது. உடனே அவர்கள் அந்த வீட்டின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் அதிர்ச்சி காத்திருந்தது.
விசாரணையில், அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை என்பது தெரியவந்தது.
மாறாக, வீட்டின் உரிமையாளர்கள், அந்த பித்தலாட்ட நபரிடம் வாடகை பணத்தை கேட்டுள்ளனர். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அப்படியானால், வீட்டை காலி செய்யும்படி எச்சரித்துள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த அந்த நபர், போலீசிடம் சென்று பொய்யாக , போலியாக கட்டுக்கதை கட்டி புகார் அளித்திருக்கிறார்.
பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தினால் புகழ் கிடைக்கும். அதன்மூலம் பிரபலமாக மாறிவிடலாம் என்று எண்ணி இத்தகைய காரியத்தை செய்ததாக அந்த நபர் உண்மையை ஒப்புக்கொண்டார்.