இந்தியாவில் ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை- காங். மூத்த தலைவர் சித்தராமையா பேச்சு
இந்தியாவில் ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை என்று சட்டசபையில் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் அம்மாநில எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் முறை மாற வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. இதில் சீர்திருத்தம் ஏற்படாவிட்டால் ஜனநாயகம் பலவீனமாகிவிடும். ஜனநாயகம் பலவீனம் அடைந்தால் நாடு பலவீனமாகிவிடும்.
தேர்தல் நடைமுறை ஒவ்வொரு முறையும் பலம் அடைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இது பலவீனம் அடைந்து வருகிறது. ஆட்சி அதிகாரம் பணக்காரர்களிடம் மட்டுமே இருக்கக்கூடாது என்று அம்பேத்கார் சொன்னார்.
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை. இதற்கு நூற்றுக்கணக்கான காரணங்களை கூற முடியும். அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சுய தூய்மையை செய்து கொள்ளாவிட்டால் ஜனநாயகத்தை காப்பது கடினம். நேர்மையானவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி செல்வதை தடுக்க வேண்டும். அதற்கேற்ப தேர்தல் முறையில் மாற்றங்களை செய்ய வேண்டும்” என்றார்.