பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து குஜராத், இமாசலபிரதேசத்தில் கால்பதிக்க தயாராகும் ஆம் ஆத்மி!
ஆம் ஆத்மி கட்சியினர் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து இமாசலபிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர்
புதுடெல்லி,
குஜராத் மற்றும் இமாசலபிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அந்த மாநிலங்களில், இப்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து குஜராத் மற்றும் இமாசலபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் ஏப்ரல் 2ம் தேதி அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் இணைந்து பேரணியில் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து, ஏப்ரல் 3ம் தேதி குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களுடன் அர்விந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதனை தொடர்ந்து, ஏப்ரல் 6ம் தேதி இமாசலபிரதேசத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் இணைந்து பேரணியில் பங்கேற்கின்றனர்.
சமீபத்தில் நடந்துமுடிந்த 5 மாநில தேர்தல்களில், பஞ்சாப் மாநிலத்தில் மாபெரும் வெற்றியை பெற்று ஆம் ஆத்மி சாதனை படைத்தது. அந்த உத்வேகத்துடன், பிற மாநிலங்களிலும் வெற்றி பெற அரசியலில் காய் நகர்த்த தொடங்கிவிட்டார் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அர்விந்த் கெஜ்ரிவால்.