அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய குண்டர்களை ஏவும் பா.ஜ.க.! - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை இன்று பாஜகவினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-03-30 11:07 GMT
புதுடெல்லி,

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்  வீட்டை,  இன்று பாஜகவினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி காஷ்மீர் பைல்ஸ் படம் குறித்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்  தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. இதனையடுத்து, பாஜகவினர் அவரை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.இதனை தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று பாஜகவினர் சிலர் அவருடைய வீட்டின் முன் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கூறுகையில்,  “கெஜ்ரிவாலை தேர்தலில் தோற்கடிக்க முடியாத காரணத்தால், பாஜக, அவரை கொல்ல விரும்புகிறது.

இதனை அரசியல் என்று சொல்லி தப்பிக்க முடியாது. இது ஒரு தெளிவான குற்றவியல் வழக்கு. இன்று பாஜகவை சேர்ந்த ரவுடிகள் அவருடைய வீட்டிற்கு சென்று ரகளை செய்துள்ளனர்”  என்று பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.   

பாஜக தொண்டர்களை முதல் மந்திரியின் வீட்டிற்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம், டெல்லி காவல்துறை காழ்ப்புணர்ச்சி மற்றும் வன்முறைக்கு உதவுகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அங்குள்ள சிசிடிவி காட்சிகளில்,  பாஜக கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி ஒரு பெரிய கூட்டம்  ‘காஷ்மீரி பண்டிட்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை கண்டித்து’  முதல் மந்திரியின் வீட்டின் முன் போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பை தாண்டி உள்ளே செல்ல முற்பட்டது தெளிவாக பதிவாகியுள்ளது.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து, டெல்லி துணை முதல் மந்திரி  சிசோடியா டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, "சமூக விரோதிகள்  கெஜ்ரிவாலின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு தடைகளை உடைத்துள்ளனர். 

அந்த குற்றவாளிகள் "பாஜகவை சேர்ந்த குண்டர்கள்". அவர்களுக்கு டெல்லி காவல்துறை உதவி செய்தது” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து டெல்லி போலீசார் கூறியதாவது;-

பாஜக யுவ மோர்ச்சாவைச் சேர்ந்த சுமார் 150-200 போராட்டக்காரர்கள், இன்று காலை 11:30 மணியளவில், முதல் மந்திரியின் இல்லத்திற்கு வந்து, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

அவர்களை "உடனடியாக" அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினோம். சுமார் 70 பேரை கைது செய்தோம். அவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும், மதியம் 1 மணியளவில், போராட்டக்காரர்களில் சிலர் இரண்டு தடுப்புகளையும் தாண்டி,  வீட்டின் வெளிப்புறத்தில் நுழைந்தனர். அங்கு அவர்கள் சலசலப்பை உருவாக்கினர், கோஷங்களை எழுப்பினர். அவர்கள் ஒரு சிறிய பெயிண்ட் பெட்டியை வைத்திருந்தனர். அதில் இருந்து கதவுக்கு வெளியே பெயிண்ட்டை வீசினர்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள போலீசார் மத்திய அரசின் கட்டுப்பட்டின் கீழ் தான் செயல்பட முடியும். எனவே, அவர்கள் பாஜகவினரை தடுத்து நிறுத்தவில்லை என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டுகிறது.

முன்னதாக, "தி காஷ்மீர் பைல்ஸ்" திரைப்படத்திற்கு வரி விலக்கு அறிவிக்க வேண்டும் என டெல்லி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். 
அதற்கு பதில் அளித்து பேசிய கெஜ்ரிவால், “ஏன் எங்களிடம் வரிவிலக்கு கேட்கிறீர்கள்.அவ்வளவு ஆர்வமாக இருந்தால், படத்தை யூடியூப்பில் போடச் சொல்லுங்கள், அனைத்தும் இலவசம். 

இதனால் ஒரே நாளில் அனைவரும் பார்க்க முடியும். அதை வரி விலக்கு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது” என்று சிரித்தபடி கூறினார். அதற்கு ஆம் ஆத்மி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆமோதித்தனர். 

டெல்லி சட்டசபையில் நடந்த இந்த சம்பவம் பாஜகவினரை கொந்தளிக்க செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்