செல்போன் அழைப்புகளில் வரும் கொரோனா விழிப்புணர்வு அறிவிப்பு ரத்தாகிறது - மத்திய அரசு பரிசீலனை
செல்போன் அழைப்புகளில் வரும் கொரோனா விழிப்புணர்வு அறிவிப்பினை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலிக்கிறது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு 2 ஆண்டுகளாக போராடி வருகிறது. இந்த போராட்டத்தின் தொடக்க காலம் முதல் மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வினை வழங்க இதுதொடர்பான தகவல்களைக் கொண்ட அறிவிப்புகள், செல்போன் அழைப்புகளில் இடம் பெற்று வந்தன.
ஒருவரை எவ்வவு அவசரமாக தொடர்புகொண்டு பேச வேண்டும் என்று அழைத்தாலும், முதலில் கொரோனா விழிப்புணர்வு அறிவிப்புதான் காதுகளை எட்டும்.
இந்த அறிவிப்புகள், காலர் டியூன்கள் கொரோனா பற்றிய விழிப்புணர்வை நாட்டு மக்கள் அடைவதில் பெரும் பங்காற்றின என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்போது நாடு கொரோனா 3-வது அலையை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் உள்ளது. மேலும், இந்தியாவில் இயற்கை தொற்றாலும், தடுப்பூசிகளாலும் பெரும்பான்மை மக்கள் நோய் எதிர்ப்புச்சக்தியை பெற்றுள்ளதால், 4-வது அலை வந்தால் கூட குறிப்பிடத்தக்க அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.
இந்த நிலையில் செல்போன் அழைப்புகளின்போது ஒலிக்கிற கொரோனா விழிப்புணர்வு அறிவிப்பையும், காலர் டியூன்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் மற்றும் மொபைல் போன் சந்தாதாரர்களிடம் இருந்து மத்திய தொலைதொடர்புத்துறைக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
இதையடுத்து இந்த செல்போன் அழைப்புக்கு முந்தைய கொரோனா அறிவிப்புகளை, காலர் டியூன்களை கைவிடுமாறு மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு மத்திய தொலைதொடர்புத்துறை கடிதம் எழுதி உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபற்றி அதிகாரபூர்வ வட்டாரங்கள் கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான பாதுகாப்புகள் குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிற நடவடிக்கைகளைத் தொடரவும், தொற்றுநோய் நிலைமை மேம்பட்டுள்ளதால், இந்த ஆடியோ கிளிப்களை (அழைப்புக்கு முந்தைய அறிவிப்புகளை, காலர் டியூன்களை) அகற்றவும் மத்திய சுகாதார அமைச்சகம் பரிசீலிக்கிறது” என தெரிவித்தன.
எனவே செல்போன் அழைப்புகளில் முதலில் வரும் கொரோனா விழிப்புணர்வு அறிவிப்பு, காலர் டியூன்கள் விரைவில் ரத்தாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.