இந்திய ராணுவத்தின் 2 ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதனை

இந்திய ராணுவத்தின் 2 ஏவுகணைகளை டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக இன்று பரிசோதனை செய்து உள்ளது.

Update: 2022-03-27 13:21 GMT

புதுடெல்லி,



இந்திய ராணுவத்தின் நடுத்தர ரக நிலப்பரப்பில் இருந்து வானில் சென்று தாக்கி அழிக்கும் 2 ஏவுகணைகளை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் இன்று விண்ணில் ஏவி பரிசோதனை செய்தது.

ஒடிசா கடற்கரையோரம் சந்திப்பூர் நகரில் ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில், இந்த அதிவிரைவு வான்வழி இலக்குகளை தாக்கி அழிக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.

இவற்றில் முதல் பரிசோதனையில், நடுத்தர உயரத்தில், அதேநேரத்தில் நீண்ட தொலைவு செல்ல கூடிய பொருளை, ஏவுகணை நடுவானில் தாக்கி அழித்தது.  2வது பரிசோதனையில், குறைந்த உயரத்தில், குறைந்த தொலைவு செல்ல கூடிய பொருளை ஏவுகணையானது தாக்கி அழித்தது.

இந்த ஏவுகணைகள் இரு நிலைகளிலான இலக்குகளை வழிமறித்து, நேரடியாக மோதி, முழுவதும் அழித்தது.

இந்த பரிசோதனையின்போது, டி.ஆர்.டி.ஓ. மற்றும் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.  இஸ்ரேல் வான்வெளி இண்டஸ்ட்ரீஸ் அமைப்புடன் இணைந்து இந்திய ராணுவ பயன்பாட்டிற்காக இந்த ஏவுகணைகளை டி.ஆர்.டி.ஓ. உருவாக்கியுள்ளது.

இந்நிகழ்வில், மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, டி.ஆர்.டி.ஓ., இந்திய ராணுவம் மற்றும் இஸ்ரேல் அமைப்புக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.  ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு இந்த பரிசோதனைகள் பெரிய மைல்கற்களாக அமைந்துள்ளன என்று டி.ஆர்.டி.ஓ. தலைவர் சதீஷ் ரெட்டி குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

மேலும் செய்திகள்