பீகாரில் ஆளும் பாஜக கூட்டணி அரசு ஊழலில் சிக்கியுள்ளது; பரபரப்பு குற்றம்சாட்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ!
அரசு அமைப்பு ஊழலில் சிக்கியுள்ளதாகவும், அதிகாரிகள் அதில் ஈடுபடுவதாகவும் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாட்னா,
பீகாரில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை அம்மாநில பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏவான ஹரிபூஷன் தாக்கூர் பச்சோல், பீகாரில் தனது சொந்த அரசாங்கத்திற்கு எதிராக கடுமையாக சாடியுள்ளார். அரசு அமைப்பு ஊழலில் சிக்கியுள்ளதாகவும், அதிகாரிகள் அதில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,
ஒரு ஊழல் வழக்கில் முசாபர்பூர் காவல் கண்காணிப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்தேன். ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அந்த அதிகாரி "சட்டம் மற்றும் ஒழுங்கின் நுணுக்கங்களை" எனக்கு விளக்கத் தொடங்கினார்.
நான் இந்தக் கட்சியைச் சேர்ந்தவன், ஆனால் அதற்காக என் கருத்துகளைத் தெரிவிக்க எனக்கும் உரிமை உண்டு. நிர்வாகத்தில் ஆழமான ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளேன்.
ஊழலுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.