16 வயது சிறுமியை கடத்திச்சென்ற காஷ்மீர் இளைஞன் மராட்டியத்தில் கைது
காஷ்மீரில் 16 வயது சிறுமியை கடத்திச்சென்ற 22 வயது இளைஞன் மராட்டியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன்பிரதேசம் ரஜோரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் ஷபிகுர் முகமது சித்திக்யூ ஹடானா. 22 வயதான முகமது கடந்த 5-ம் தேதி தான் வசித்துவந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திச்சென்றான்.
இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது மற்றும் அந்த இளைஞன் கடத்திச்சென்ற சிறுமியையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், முகமது மற்றும் அந்த சிறுமி மராட்டிய மாநிலம் பல்ஹர் மாவட்டத்தில் இருப்பதாக காஷ்மீர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அதிரடி சோதனை நடத்திய போலீசார் பல்ஹரில் அந்த சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த முகமதுவை கைது செய்தனர். மேலும், அந்த சிறுமியையும் போலீசார் மீட்டனர்.
இதனையடுத்து, அந்த சிறுமி மற்றும் முகமதுவை விசாரணைக்காக போலீசார் காஷ்மீருக்கு அழைத்து சென்றனர்.