பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையம் குஜராத்தில் நிறுவப்படும் - ஆயுஷ் அமைச்சக மந்திரி

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை நிறுவ உலக சுகாதார நிறுவனத்துடன் மத்திய ஆயுஷ் அமைச்சகம் அதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது.

Update: 2022-03-26 07:57 GMT
புதுடெல்லி, 

உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை நிறுவ, உலக சுகாதார நிறுவனத்துடன் மத்திய ஆயுஷ் அமைச்சகம் அதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது. 

இந்திய அரசாங்கத்தின் 25 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டின் ஆதரவுடன், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் பாரம்பரிய மருந்துகளின் திறனை அதிகப்படுத்துதல் என்ற நோக்கத்துடன் இந்த மையம் தொடங்கப்பட உள்ளது.

குஜராத்தில் உள்ள ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த மையத்தின் இடைக்கால அலுவலகம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். 

மேலும், உலகிலேயே பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார நிறுவனத்தின் ஒரே உலகளாவிய மையமாக இது இருக்கும். பாரம்பரிய மருத்துவத்தில் நமது பலத்தை காட்ட ஒரு வாய்ப்பு என்று ஆயுஷ் அமைச்சக மந்திரி சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், “அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சைக்கான அணுகல் இருப்பதை உறுதி செய்வது உலக சுகாதார அமைப்பின் பணிகளில் இன்றியமையாத பகுதியாகும்.  

பாரம்பரிய மருத்துவத்திற்கான ஆதாரத் தளத்தை வலுப்படுத்த அறிவியலின் ஆற்றலைப் பயன்படுத்த இந்த புதிய மையம் உதவும். 

இந்திய அரசாங்கத்தின் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், இதனை வெற்றியடையச் செய்ய நாங்கள் எதிர்நோக்குகி்றோம்” என்று வாழ்த்தினார்.

புதிய மையம் உலகின் அனைத்து பகுதிகளையும் ஈடுபடுத்தி பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவ நடைமுறைகள் மற்றும் தயாரிப்புகள் மீதான கொள்கைகள் மற்றும் தரநிலைகளுக்கான உறுதியான ஆதாரத் தளத்தை உருவாக்குவதில் இந்த மையம் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மையம் உலக நாடுகள் தங்கள் சுகாதார அமைப்புகளில் பொருத்தமானதாக ஒருங்கிணைக்கவும் அதன் தரம் மற்றும் பாதுகாப்பை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது.

உலக சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பாரம்பரிய மருத்துவத்தின் பங்களிப்பை மேம்படுத்த, புதிய மையம் நான்கு முக்கிய பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது:- சான்றுகள் மற்றும் கற்றல்; தரவு மற்றும் பகுப்பாய்வு; நிலைத்தன்மை மற்றும் சமபங்கு; புதுமை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய  நான்கு முக்கிய பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது. 

இந்தியாவில் பாரம்பரிய மருத்துவத்திற்கான  உலக சுகாதார அமைப்பின் புதிய உலகளாவிய மையத்தின் துவக்கம் ஏப்ரல் 21, 2022 அன்று குஜராத்தின் ஜாம்நகரில்  நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்