”20 நிமிடத்துக்கு மேல் உன் கொடுமையை யாராலும் தாங்க முடியாது” தற்கொலை செய்த பெண் கணவனுக்கு கடிதம்
படுக்கையறையில் கேமிரா வைப்பது, வாய்ஸ் ரெக்கார்டர் வைப்பது உள்ளிட்ட கணவனின் சந்தேக கொடுமையால் பெண் பத்திரிகையாளர் தற்கொலை செய்துகொண்டார்.
திருவனந்தபுரம்
கேரளா காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுருதி( வயது 36). சுருதி பெங்களூரூவில் ஒரு பிரபல பத்திரிகையில் சீனியர் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தார். சுருதிக்கும் கேரளா தலிப்பரம்பு பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணமான முதல் நாளிலிருந்தே அனீஸ் சுருதியிடம் சந்தேகத்துடன் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. படுக்கையறைக்குள் கேமிரா வைப்பது, வாய்ஸ் ரெக்கார்டர் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல் குடும்ப சண்டையின் பொழுது இரண்டு முறை சிருதியை கொலை செய்யவும் அனீஸ் முயன்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலமுறை சுருதியின் தயார் செல்போனில் அழைத்த போதும் சுருதி செல்போனை எடுக்கவில்லை. இதனால் பயந்துபோன அவரின் தயார் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலாளிக்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.
காவலாளி சென்று பார்க்கும் போது சுருதி தங்கியிருந்த வீட்டில் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்த நிலையில் கதவை திறக்கவில்லை. இதனால் பால்கனி வழியாக சென்று கதவை உடைத்து பார்த்த பொழுது சுருதி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக சுருதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்த நிலையில் சைக்கோ கணவன் அனீஸ் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
சுருது எழுதிய 3 கடிதங்களை போலீசார் கைபற்றி உள்ளனர். ஒன்று, காவல்துறைக்கு, மற்றொன்று கணவருக்கும், மூன்றாவது, வயதான தனது பெற்றோருக்கும் சுருதி எழுதியவை.
கணவருக்கு எழுதிய தற்கொலைக் கடிதத்தில், 20 நிமிடத்துக்கு மேல் யார் ஒருவராலும் உன்னுடைய கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாது. ஒரு வேளை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், காது கேட்காத, கண் தெரியாத பெண்ணை திருமணம் செய்து கொள். அப்போதுதான் நீ என்ன பேசுகிறாய், செய்கிறாய் என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார் என்று குறிப்பிட்டிருப்பதாக சகோதரர் நிஷாந்த் கூறினார்.
பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், நான் வாழ்ந்து கொண்டிருந்தால், அது உங்களுக்கு ஒவ்வொரு நாளையும் துக்கமாக மாற்றிவிடும். அதுவே நான் இறந்துவிட்டால் ஒரு சில நாள்களில் துக்கம் போய்விடும் என்று சுருதி கூறியுள்ளார்.
இந்த தற்கொலை சம்பவத்தில், நிஷாந்த் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவருடன் பணியாற்றிய நண்பர்கள், திருமணத்துக்கு முன் அவர் எப்போதும் மகிழ்ச்சியாக காணப்படுவார். சவாலை திறமையாகக் கையாள்பவர். ஆனால் ஒரு திருமணம் அவரை எப்படி மாற்றிவிட்டது என்று தெரியவில்லை. துணிச்சலானவர் என்பதால்தான் அவர் யாருடைய உதவியையும் நாடவில்லை என்று கூறி கண் கலங்குகிறார்கள்.