நுகர்வோருக்கு மானிய விலையில் சமையல் எண்ணெய் வழங்கப்படுமா? - மத்திய மந்திரி பதில்
நுகர்வோருக்கு மானிய விலையில் சமையல் எண்ணெய் வழங்கப்படுமா என்பது குறித்து மத்திய மந்திரி பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி,
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், மானிய விலையில் சமையல் எண்ணெய் வழங்கப்படுமா? என மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி பதில் அளித்தார்.
எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், ‘தற்போதைய நிலையில், நுகர்வோருக்கு மானிய விலையில் சமையல் எண்ணெய் வழங்கும் பரிந்துரை எதுவும் மத்திய அரசிடம் இல்லை’ என்று கூறினார். அவர் மேலும் கூறும்போது, ‘உள்நாட்டில் உற்பத்தியாகும் சமையல் எண்ணெயால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. சமையல் எண்ணெய்களின் தேவைக்கும், வினியோகத்திற்கும் இடையே உள்ள இடைவெளி சுமார் 56 சதவிகிதம். இது இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது’ என்றும் தெரிவித்தார். கடந்த 2020-21-ம் ஆண்டில் நாட்டில் சமையல் எண்ணெய்களின் தேவை 246.03 லட்சம் டன்னாக இருந்ததாக கூறிய மந்திரி, அந்த ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி 111.51 லட்சம் டன்னாகவும், இறக்குமதி 134.52 லட்சம் டன்னாகவும் இருந்ததாகவும் கூறினார்.