தொடர் அமளி: ஆந்திர சட்டசபையில் இருந்து 5 தெலுங்குதேச எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்

தொடர் அமளியில் ஈடுபட்டதால் ஆந்திர சட்டசபையில் இருந்து 5 தெலுங்குதேச எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-03-23 18:52 GMT
விஜயவாடா,

ஆந்திர சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்று காலையில் சபை கூடியபோது, மாநிலத்தில் விஷ சாராயம் குடித்து ஏராளமானோர் பலியான சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதில் 5 எம்.எல்.ஏ.க்கள் திடீரென சபாநாயகரின் இருக்கைக்கு அருகே சென்று கோஷமிட்டனர். அத்துடன் சிறிய இசைக்கருவி ஒன்றை பயன்படுத்தி புதுமையான போராட்டத்தை மேற்கொண்டனர். இதனால் அவையில் பெரும் குழப்பம் நிலவியது.

இந்த களேபரத்தால் எரிச்சல் அடைந்த சபாநாயகர் தம்மினேனி சீதாராம், தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சட்டசபையில் விசில் அடித்ததற்காக நேற்று முன்தினமும் தெலுங்குதேச எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்