திருவிழாக்களில் கடை போட 'முஸ்லிம்களுக்கு' தடை...! கர்நாடகாவில் கிளம்பும் புது 'சர்ச்சை'... !

கர்நாடகாவில் திருவிழாக்களில் கடை போட 'முஸ்லிம்களுக்கு' தடை விதிக்கப்பட்டு உள்ளது இதனால் அங்கு புது சர்ச்சை எழுந்து உள்ளது.

Update: 2022-03-23 11:35 GMT
பெங்களூரு

கர்நாடகத்தில்  தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் உள்ள மகாலிங்கேஸ்வரா கோவிலில் ஏப்ரல் 20ல் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின்போது ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வர். இந்நிலையில் கடை அமைப்பதற்கான ஏலம் மார்ச் 31ல் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் முஸ்லிம் வியாபாரிகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, உடுப்பி மாவட்டம் காபுவில் உள்ள ஒசமாரிகுடி கோவிலிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு காரணம் ஹிஜாப் சர்ச்சை காரணம் என்று பரவலாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய முஸ்லிம்கள், இதுவரை இந்துக்கள் முஸ்லிம்கள் சகோதரர்களாக பழகி வருகிறோம். ஆனால் தற்போதைய பிரச்சினையை கருத்தில் கொண்டு தடை விதிக்கப்படுவது தவறானது என்கின்றனர்.

இந்த நிலையில் இன்றைய சட்டசபை கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் யு.டிகாதர், "சமுதாயத்தில் நல்லிணக்கம், சகோதரத்துவத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர அதற்கு பங்கத்தை ஏற்படுத்தும் வேலையை யாரும் செய்யக்கூடாது. தெருவோர வியாபாரிகள் சுயமரியாதையுடன் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அத்தகையவர்களுக்கு மத திருவிழாக்களில் கடைகளை திறக்க அனுமதி இல்லை என்று சிலர் தடை விதித்துள்ளனர்.. 

சமுதாயத்தில் சகோதரத்துவம் அவசியம். எந்த மாதமாக இருந்தாலும் மத ஆன்மிக தலங்களில் எந்த மதத்தை சேர்ந்தவரும் வியாபாரம் செய்ய அவகாசம் உள்ளது. முஸ்லிம்கள் வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை என்று பேனர் வைக்கிறார்கள். அத்தகையர்கள் நல்லிணக்கத்தை கெடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்தகையவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் ரிஸ்வார் ஹர்ஷத் பேசினார்.

இந்த விவாதத்தி்றகு சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி பதிலளிக்கையில் கூறியதாவது:-

2002-ம் ஆண்டு இந்து அறநிலைய சட்டப்படி, இந்த மத ஆன்மிக தலங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள கட்டிடங்களை இந்து அல்லாதோருக்கு குத்தகைக்கு வழங்க முடியாது. இந்த சட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை தான் நான் இங்கே குறிப்பிடுகிறேன். அதே நேரத்தில் பொது இடங்களில் இவ்வாறு பிற மத வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை என்று பலகை வைத்தால் அதன் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். மத நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதை அரசு அனுமதிக்காது" என கூறினார்.

மேலும் செய்திகள்